Pages

Friday, 11 October 2013

Thamizh ini....

தமிழ் இனி.....

மெரினா கடற்கரையோரம் காற்று வாங்கலாம் என நண்பர் ஒருவருடன் சென்றேன். அது ஞாயிற்றுகிழமை ஆதலால் மக்கள் அலைகடலென திரண்டிருந்தனர். உழைப்பாளர் சிலையை கடந்து நடைபாதை வழியாய் மணலை நோக்கி நடந்தோம். சென்னை நகரமே கடற்கரையில் திரண்டிருந்தது போன்ற பிரம்மை. அருகாமையில் ஒரு உல்லாச பேருந்து சில பயணிகளை இறக்கி கொண்டிருந்தது. ஒரு கனத்த பெண்மணி தன்னுடன் வந்த ஒரு குழந்தையை செல்லமாய் கடிந்து கொண்டாள். "சுப் ரஹோ, மே தும்கோ வஹா லே ஜாவுங்க" என்ற பெண்மணியை கண்டு சமாதானம் ஆனாள் அக்குழந்தை. நம் நண்பர் சிரித்தபடியே, "இவங்க இந்திகாரங்க பாஸ், பீகாரிலிருந்து வந்திருப்பாங்க" என்றார்.



சற்றே முன் செல்ல எத்தனித்த வேளையில் ஒரு தம்பதியர் எங்களை கடந்து சென்றனர். அப்பெண்மணி அழகாய் இருக்கவே நம் நண்பர் ஒரு ஓரப்பார்வை வீசினர். உடனே அப்பெண்மணி தன் கணவரிடம், "இக்கட பீச் மட்டுகே பாக உந்தி, இ தமிலோளுனி சூச்தே பயங்க உந்தி" என்றாள். எனக்கு தெலுங்கு சற்றே தெரியும் என்பதால் நண்பருக்கு மொழிபெயர்த்தேன், "நண்பா உன் பார்வை ரொம்ப மோசம் என்கிறாள் அந்த பெண்". ஆவேசமடைத்த நண்பரை சமாதானபடுத்த சில நிமிடங்கள் ஆயின. 

மாலை நேரம் என்பதால் கதிரவன் இதமாயிருந்தான், கடல் காற்றும் கூட சேர்ந்து மனதை வருடியது. நம் நண்பர் என்னை இடிக்கவே முன்னோக்கினேன், ஒரு பெரிய குடும்பம் பொடிசுகள், இளசுகள், பெரியவர் புடை சூழ நம்மை கடந்து சென்றது. எதோ ஒரு மழலை "ஏற்ற தூரம் போகனம்?" என்றாள். இம்முறை நண்பர் என்னை நோக்கி சிரித்தபடியே "மலையாளம், எனக்கும் கொஞ்சம் தெரியும்" என்றார்.

கடற்கரையை நெருங்கிய வேலையில் மனதில் ஏதோ ஒரு உறுத்தல். நண்பரை நோக்கினேன், "நண்பா, ஒன்றை கவனித்தாயா, இவ்வளவு தூரம் நடந்தோமே, ஒருவராகிலும் தமிழ் பேசுவதை கவனித்தாயா" என்றேன். நண்பர் நான் சொல்வதை கவனித்தாரோ இல்லையோ அருகாமையில் சில இளம் பெண்கள் விளையாடுவதை கண் கொட்டாமல் ரசித்து கொண்டிருந்தார். இனி இவரிடம் இதை பற்றி பேசி பயன் இல்லையென அமைதியானேன்.



என் மன சிந்தனையை அறிந்தது போல ஒரு சிறு குடும்பம் எங்கள் முன் வந்துகொண்டிருந்தது. நடுத்தர வயதுடைய கணவன் மனைவி மற்றும் இரு குழந்தைகள் என அளவான குடும்பம். அவர்கள் முகமே ஒரு தமிழ் குடும்பம் என பறைசாற்றியது. எனக்குள் ஒரு இனம் புரியா குதூகலம். அக்குழந்தை தன தாயை நோக்கி "அம்மா, எனக்கு அந்த பொம்மை வேணும்மா" என்றாள். சற்றும் தாமதியாமல் அப்பெண் கோபத்துடன் "ஹொவ் மெனி டைம்ஸ் ஐ எவ் டோல்ட் யு, டாக் இன் இங்கிலீஷ்" என்றாள். அக்குழந்தை மிகுந்த ஏமாற்றத்துடன் " ஒகே மாம், ப்ளீஸ் பை மீ தட் டாய்" என்றாள்.

என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றேன். கோபம், வெறுப்பு, ஏமாற்றம், ஆச்சர்யம் என பலவிதமான உணர்வுகள். நண்பரை கோபத்துடன் நோக்கினேன், மிக பணிவாக "நீ என்ன கூறினாலும் நான் கேட்கிறேன்" என்பது போல பாவனை செய்தார். " நண்பா பார்த்தாயா இந்த கொடுமையை, இம்மட்டும் நாம் பார்த்தவர்கள் வேறு மாநிலதவராயினும் தம் தாய் மொழியில் பேசினர். ஆனால் இங்கோ நிலைமை தலைகீழாய் உள்ளது. தமிழ் பேசுவதையே அவமானமாய் கருதுகின்றனர், ஆங்கிலம் பேசினால்தான் கவுரவம் என்ற பொய்யான கணிப்பு."



நண்பர் மிகவும் அமைதியாக இருக்கவே, நானும் அமைதியானேன். சற்று நேரம் மணலில் அமர்ந்து கடலை நோக்கினேன், மனம் ஏனோ லேசானது போன்ற ஒரு உணர்வு. நண்பர் குறும்பு பார்வை பார்த்தபடியே "விடுங்க நண்பா, வாங்க அந்த பாணி பூரி சாப்பிடலாம், அந்த பையன் கடையிலே நல்லாயிருக்கும்" என்றார். இருவரும் அந்த வட இந்திய சிறுவனின் கடையை நோக்கி நடந்தோம். எங்களை நோக்கியதும் அவன் சிரித்தபடியே "வாங்கண்ணே!" என்றான்.

ஏனோ என் மனம் மறுபடியும் குதூகலமானது.